டி20 போட்டிகளில் டெஸ்ட் பேட்டிங் ஆடுகிறார், கடந்த சில ஆண்டுகளாகவே தோனியின் ஸ்லோவ் பேட்டிங் அணியின் தோல்விக்கு வழிவகுக்கிறது என்ற விமர்சனங்கள் முன்னாள் வீரர்களிடமிருந்தும், சமூகவலைத்தளங்களில் இருந்தும் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் தனது பேட்டிங் மூலம் அந்த விமர்சனங்களை வீழ்த்தி விடுவது தல தோனியின் ஸ்டைல்.
தோனி இதுவரை ஐ.பி.எல். போட்டிகளில் இன்னிங்ஸின் கடைசி ஓவரான 20-வது ஓவரில் மட்டும் 213 பந்துகளை சந்தித்து 509 ரன்கள் விளாசியுள்ளார். அவரின் ஐ.பி.எல். ரன்களில் 12.2% ரன்கள் 20-வது ஓவரில் அடிக்கப்பட்டது என்பது அசாதாரணமான ஒரு சாதனையாகும். இதில் 37 பவுண்டரிகள், 41 சிக்ஸர்கள் அடங்கும். 238.96 என்ற இமாலய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 4 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்கள் உட்பட 19 அடித்து கலக்கினார். இன்னிங்ஸின் ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இன்னிங்ஸின் முடிவில் 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்திருந்தார். தோனிக்கு வயதாகிவிட்டது, முன்னர் போல சிறந்த பினிஷர் இல்லை என்ற விமர்சனங்களையும் சேர்த்து விளாசினார்.
ஸ்லோவ் ரன் ரேட்டில் இருந்து ஸ்பெஷல் அதிரடிக்கு மாறுவது இது முதல் முறை அல்ல. விக்கெட்கள் சரியும்போது அணியின் ஸ்கோரை நிலைமைக்கு ஏற்றவாறு நகர்த்தும் தோனி, இன்னிங்ஸின் கடைசி கட்டங்களில் பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசுவார்.
இதுவரை 162 ஐ.பி.எல். இன்னிங்ஸில் 61 முறை நாட் அவுட். நம்பர் 3 பேட்ஸ்மேன் முதல் நம்பர் 7 பேட்ஸ்மேன் வரை பல பேட்டிங் பொசிசன்களில் களமிறங்கியுள்ளார். தன்னுடைய சொந்த சாதனைகளை ஒருபோதும் பொருட்படுத்தாமல், அணியின் காம்பினேஷனுக்காகவும், அணியின் வெற்றிக்காகவும் எது தேவையோ, அதற்கேற்ப தன் பேட்டிங் பொசிசனை மாற்றிக் கொண்டு வருகிறார்.
2010-ஆம் ஆண்டு லீக் சுற்றின் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இர்பான் பதான் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அணியை வெற்றி பெற வைத்து அனைவரையும் திகைக்க வைத்தார் தல தோனி. அந்த போட்டியின் வெற்றி மூலம் சென்னை அணி ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்று ஐ.பி.எல். கோப்பையை முதன் முதலில் வென்றது. தோனியின் அந்த ஆட்டம் தொடரை வெல்ல உதவியது.
ஐ.பி.எல். வரலாற்றில் டாப் 10 சிறந்த சேஸிங் இன்னிங்ஸ்களை எடுத்துப் பார்த்தால் அதில் தோனி என்ற பெயரே ஆதிக்கம் செலுத்தும். 2016-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக புனே அணி கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடியது. கடைசி பந்தில் சிக்ஸ் உட்பட 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற வைத்தார் தோனி.
2013-ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 15 ரன்கள், 2014-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 12 ரன்கள், 2014-ல் மும்பைஅணிக்கு எதிராக 11 ரன்கள், 2014-ல் டெல்லி அணிக்கு எதிராக 11 ரன்கள் என கடைசி ஓவரில் 10-க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்தபோது அசால்ட்டாக அந்த ரன்களை விளாசியுள்ளார். ஒரு தொடரில் விளாசும் வீரர்கள் அடுத்த தொடரில் சொதப்புவதுண்டு. ஆனால் 12 ஆண்டுகளாக ஐ.பி.எல்.-லில் பினிஷிங் செய்து தனித்துவமான பினிஷிங் ஸ்கில்களுடன் தனி ஒருவனாக வலம் வருகிறார் பினிஷிங் கிங் தோனி.
தோனியின் விமர்சகர்கள், இன்னும் ஆயிரம் விமர்சனங்களை அவர் மீது வைக்கலாம். ஆனால் கூலாக அதை ஒதுக்கி தள்ளி, அணிக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக செய்துவிட்டு அமைதியாக தன் ஸ்டைலில் பதில் அளிப்பார் ரசிகர்களின் கேப்டன் தோனி.