இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மேலும், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும் கரோனா உறுதியானது.
இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இந்தநிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கும், அக்டோபரில் நடைபெறவுள்ள இருபது ஓவர் போட்டிகளுக்கும் இடையே மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயன்றுவருகிறது.
இந்தநிலையில், தற்போது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 16 முதல் 20ஆம் தேதிகளுக்குள் தொடங்கி, அக்டோபர் 9 அல்லது 10ஆம் தேதியில் முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மீண்டும் தொடங்கவுள்ள இந்த ஐபிஎல் தொடர், கடந்தமுறை போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மே 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.