கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடரானது அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் அமீரகத்தில் உற்சாகமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னால் சென்னை அணியைச் சேர்ந்த ஒரு பந்துவீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 20 நாட்களுக்குக் குறைவான நாட்களே இருப்பதால் திட்டமிட்டபடி சென்னை அணியால் இத்தொடரில் பங்கெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா, தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும், இத்தொடரில் அவர் பங்கெடுக்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது. இது சென்னை அணிக்கு மேலும் சிக்கலை உண்டு பண்ணியது. இந்நிலையில் இது குறித்து பிசிசிஐ தலைவரான கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கங்குலி, “தற்போது சென்னை அணியின் நிலை குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை அணி தயாராகிவிட முடியும் என்று நினைக்கிறேன். இத்தொடரானது நீண்ட நாள் நடைபெறக்கூடியது. அனைத்தும் சுமூகமாக நடைபெறும் என்று நம்புகிறேன்" என்றார்.