ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மும்பையில் இருந்து புறப்பட்டது.
8ஆவது 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் 16ம் தேதி துவங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு மும்பையில் இருந்து புறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பெர்த் மைதானத்தில் 13ம் தேதி வரை இந்திய வீர்ர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஷமி தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது. இருந்தும் அணியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பேசினார். அதில், “இப்போது இருக்கும் வீரர்களில் 7 முதல் 8 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா புதிய களம், அதனால் தான் விரைவாக ஆஸ்திரேயாவிற்கு செல்கிறோம். முதலில் பெர்த் சென்று அங்கு மைதானத்தின் தன்மையை பார்க்க உள்ளோம். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆட உள்ளோம். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு இழப்புதான் எனினும் அவருக்கு மாற்றாக நம்மிடம் நல்ல பவுலர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய மைதானத்தை பொறுத்தே யாருக்கு அணியில் இடம் என்பது தெரியும்” எனக் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ரிஷாப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, அஸ்வின், சஹால், அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் முகம்மது ஷமி, தீபக் சாகர், ரவி பிஷனாய், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஸ்டாண்ட் பை பிளேயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.