வங்கதேசத்தின் கிரிக்கெட் அகாடமி பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இருந்த வாசிம் ஜாபர் கடந்த ஆண்டு நடந்த டாக்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார். அதன்பின் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற வங்கதேச கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சியாளராக இருக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் சங்க அழைப்பை ஏற்ற வாசிம் ஜாபர் வரும் ஜூன் மாதம் வங்கதேசம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒப்பந்தப்படி ஆறுமாத காலம் வங்கதேசத்திலும், மீதமுள்ள ஆறுமாத காலம் ரஞ்சி கோப்பைக்காக பயிற்சியிலும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் தொடர்ந்து ரஞ்சியில் விளையாடி வரும் இவர் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த அணி கோப்பை வென்றதில் இவரது பங்கு மிக முக்கியமானது. மேலும் ரஞ்சி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இவரே முதல் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.