தோனி தலைமையின் கீழ் விளையாடிய நாட்கள் குறித்து வாஷிங்டன் சுந்தர் மனம் திறந்து பேசியுள்ளார்.
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர், தன்னுடைய சிக்கனமான பந்துவீச்சு மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், தோனி தலைமையிலான புனே அணிக்காக விளையாடிய அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "தோனி தலைமையிலான புனே அணிக்காக விளையாடிய போது கிரிக்கெட் வீரராக என்னை மெருகேற்றிக்கொள்ள முடிந்தது. புதிய விஷயங்கள் பலவற்றை கற்று, என்னுடைய பந்துவீச்சையும் மேம்படுத்தினேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "பந்தை தாமதமாக கையிலிருந்து விடுவது என்னுடைய பலம். பேட்ஸ்மேனின் காலை கவனித்தாலே அவர் என்ன செய்ய திட்டமிடுகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடும். நான் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பந்தை தாமதமாக வீச முயற்சிக்கிறேன். அதனால்தான், பேட்ஸ்மேன் செய்ய நினைப்பதற்கு எதிர்வினை ஆற்ற முடிகிறது" எனக் கூறினார்.