குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நாடு தழுவிய தமிழ் அமைப்புகளுக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், தனது பதினான்காம் ஆண்டு மீலாது நபி பெருவிழாவை முன்னிட்டு இந்த வாலிபால் போட்டிகளை சால்மியா பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ போட்டிகளை தொடங்கி வைத்தார். பொருளாளர் திருபுவனம் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட சங்கத்தின் விளையாட்டுக் குழுவினர் முன்னிலை வகித்தனர். குவைத் நாட்டில் சமூக சேவைகள் செய்து கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளில் பதினாறு அணியினர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் வழங்கிய சுழற்கோப்பைகளும், பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் நிறுவனர் ஹச். முஸாவுத்தீன் ஆகியோர் போட்டியில் முதலிடம் பெற்ற அணி தமிழ் நண்பர்கள் (அபூ ஹலீஃபா) அணியினருக்கும், இரண்டாமிடம் பெற்ற குவைத் தமிழ் நண்பர்கள் (ஃபர்வானிய்யா) அணியினருக்கும் சுழற்கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர். ஆட்ட நாயகன் விருது தமிழ் நண்பர்கள் அணியின் கேப்டன் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது.