தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஃபாலோ ஆன் அடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி, அதிலும் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் முதன்முறையாக தென் ஆப்பிரிக்கா அணியை வைட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி சிறப்பாக விளையாடியது என்பதை போல, தென் ஆப்பிரிக்கா அணி மோசமாக விளையாடியது என்பதும் மறுக்க முடியாததே.
இந்நிலையில் இந்த தொடர் தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்லெஸிஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "இந்த இந்தியத் தொடர் உண்மையிலேயே கடினமானதுதான். இதற்கு முன்பாக 30-40 டெஸ்ட்கள் ஆடிய முதிர்ச்சியடைந்த வீரர்கள் எண்கள் அணியில் இருந்தனர். ஆனால் இப்போது பார்த்தால் 6,7, டெஸ்ட் போட்டிகள் ஆடிய வீரர்களே அணியில் உள்ளனர். துணைக்கண்டத்தில் விளையாடும்போது எங்கள் பந்து வீச்சுப் பாணி வெற்றியடைவதில்லை. எனவே இங்கு எங்களது பவுலிங் பயனளிக்கவில்லை.
அதே நேரம் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுமே சிறப்பாக இருந்தது. முதல் இன்னிங்ஸ்களில் இந்திய அணியினரின் கருணையற்ற பேட்டிங் எங்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்து விட்டது. தொடர் முழுவதும் ஒவ்வொரு முறையும் 500, 600 என்று அவர்கள் ரன்களைக் குவித்தனர். உடலும் மனமும் சோர்வடையும் போது தவறுகள் செய்கிறோம். இது போன்ற தொடர்கள் மனதில் ஆறாப்புண்ணாகி அதிலிருந்து வெளி வருவது கடினமாகிவிடுகிறது" என தெரிவித்தார்.