உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து, அணி வீரர்களுக்கும் பிரச்சனை நிலவி வருவதாக தகவல்கள் வெளியானது.
அதன் உச்சகட்டமாக கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் அணி வீரர்கள் இரு குழுவாக பிரிந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து பின்னர் அடங்கியது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக மியாமி செல்லும் முன், இந்திய வீரர்களுடன் கோலி செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த செல்ஃபியில் ரோகித் சர்மா இடம்பெறாததால், கோலிக்கும், ரோஹித்துக்குமான சண்டை உண்மைதான் எனவும், சண்டை இல்லை என்றால் ரோஹித்துடன் புகைப்படம் எடுக்காதது ஏன் எனவும் ரசிகர்கள் கோலியிடம் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் நேற்றும் கோலி, தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதிலும் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ’ஸ்குவாட்’ என்று அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் ரோகித் இல்லாததால், ரசிகர்கள் மீண்டும் ரோஹித் உடனான நட்பு குறித்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.