யாரை அணியில் தேர்ந்தெடுப்பது என்று யோசிக்கும் அளவுக்கு தற்போதைய அணி மிகச்சிறப்பாக அமைந்திருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டப்ளினில் அயர்லாந்துக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டம் அமைந்த இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார் கேப்டன் விராட். அதுவும் மிகச்சிறப்பாக பலனளிக்க இந்திய அணி வெற்றிவாகை சூடியது.
இந்நிலையில், அணியில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து பேசிய விராட் கோலி, சமச்சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம், எங்களுக்குத் தேவையான வெற்றியைப் பெறுவதற்கான உத்வேகம் கிடைத்திருக்கிறது. இப்போதிருக்கும் தலைவலியே சிறந்த குழுவில் இருந்து யாரைத் தேர்வுசெய்வது என்பதுதான். இதுவும் ஆரோக்கிய அறிகுறிதான். இங்கிலாந்து தொடர் கடினமான ஒன்றாகவே இருக்கப்போகிறது. ஆனால், நாம் அந்த அணி வீரர்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை. அந்தளவுக்கு திறமையான வீரர்கள் நம்மிடம் இருப்பதே அதற்குக்காரணம். அவரவர் பொறுப்புகளைக் கையில் எடுத்துக்கொள்வதால், ஒரு கேப்டனாக இருந்து அவர்களை வேலை வாங்க வேண்டிய அவசியமும் எனக்கில்லாமல் போகிறது என தெரிவித்துள்ளார்.