இங்கிலாந்து உடனான தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்படும் என இந்திய அணி முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்காக, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி, நாளை டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்படுகிறது. அங்கு செல்லும் இந்திய அணி ஜூன் 27, 29 தேதிகளில் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளிலும், ஜூலை 3ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் 3டி20, 3 ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் களமிறங்குகிறது.
அடுத்தாண்டு இங்கிலாந்தில் வைத்து உலகக்கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு மிகச்சிறப்பாக செயல்படும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து தரப்பிலும் ஆல்ரவுண்டான அணியாக இருப்பதால், நாம் பயப்படத் தேவையில்லை. அதேபோல், நம் அணியில் பலர் குறைந்தது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் இதற்கு முன்னரும் இங்கிலாந்து நாட்டில் பலமுறை விளையாடியவர்கள் என்பதால், அச்சப்படத் தேவையில்லை. இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் குறிப்பாக இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.