ஐ.சி.சி.யின் உயரிய விருதான ஹால் ஆஃப் ஃபேம் விருது இந்தியாவின் முன்னாள் கேப்டன் ராகுல் ட்ராவிட்டுக்கு வழங்கப்படுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்றழைக்கப்பட்டவர் ராகுல் ட்ராவிட். அதேசமயம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக ஆடுவதையும் அவர் தவிர்த்ததில்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களையும் குவித்தவர். இதில் 48 சதங்களும், 146 அரைசதங்களும் அடக்கம். இவரது சாதனைகளைப் பாராட்டும் விதமாக ஐ.சி.சி. இந்த விருதை வழங்கியிருக்கிறது.
இந்தியா ஏ அணிக்காக பயிற்சியாளராக செயல்பட்டு வருவதால், ட்ராவிட் இந்த விருது வழங்கும் விழாவிற்கு நேரில் செல்லவில்லை. இருப்பினும் தனக்கு விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வீடியோ மூலம் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த விருது தனது கிரிக்கெட் வாழ்க்கையை பெருமைப்படுத்துவதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சகவீரர்கள் மற்றும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி சாதனைகள் குவிக்க காரணமாக இருந்த எதிரணியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட்டோடு சேர்த்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் க்ளேர் டெய்லர் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கும் ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இந்த விருதை வாங்கும் ஐந்தாவது வீரர் ராகுல் ட்ராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.