ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடரை வெற்றியுடன் துவக்க தீவிர முனைப்பு காட்டிவருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் புதிய சாதனை படைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 43 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 11,867 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 133 ரன்கள் எடுப்பதன் மூலம் ஒருநாள் போட்டியில் 12,000 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இணையவுள்ளார். விராட் கோலி இந்தப்பட்டியலில் இணையப்போகும் ஆறாவது வீரராகும்.
மேலும், 300-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடி விராட் கோலி இந்தச் சாதனையை படைக்க இருப்பதால், குறைவான போட்டிகளில் விளையாடி 12,000 ரன்களை எட்டிய முதல்வீரர் என்ற சாதனையை விராட் கோலி பதிவு செய்யவிருக்கிறார். இன்னும் 133 ரன்கள் மட்டுமே தேவையென்பதால் எதிர்வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலேயே இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிது.