Skip to main content

ஷேவாக்கை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Virat Kohli pushed back Sehwag test cricket

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த டெஸ்ட் போட்டியானது,  மூன்றாம் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, 1 - 0 என்ற புள்ளியில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.

 

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்  அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் ( ஜூலை 20)  தொடங்கியது. இதில், டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினார்கள்.

 

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். இதில் ரோகித் சர்மா  80 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முந்தைய டெஸ்ட் தொடரில், இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1999 ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து இரு டெஸ்ட் தொடர்களிலும் செஞ்சுரி பார்ட்னர்சிப் அமைத்துத் தந்த இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மாவும், யஷஸ்வியும் பெற்றுள்ளனர்.

 

இதையடுத்து வந்த சுப்மன் கில் 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் களம் இறங்கினார்கள். மிகவும் எச்சரிக்கையாக ஆடிய விராட் கோலி தனது 21வது பந்தில் தான் தனது முதல் ரன்னை எடுத்தார்.தொடர்ந்து ஆடிய விராட் கோலி தனது சதத்தை நிறைவு செய்வதற்க்குள் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 84 ஓவர்களில்  4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்தது.  விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து  பேட்டிங் செய்தனர்.

 

போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராட் கோலி 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதன் மூலம் 111 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் விராட் கோலி இதுவரை 29 சதம் உள்பட 8,676 ரன்களை சேர்த்துள்ளார். அந்த வகையில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களும், இரண்டாவது இடத்தில் ராகுல் டிராவிட் 13,288 ரன்களும், மூன்றாவது இடத்தில் கவாஸ்கர் 10,122 ரன்களும், நான்காவது இடத்தில்  வி.வி.எஸ்.லட்சுமணன் 8,781 ரன்களும் எடுத்து முதல் 4 இடத்தில் உள்ளனர். இதில்,விராட் கோலி தனது 32 ரன்களை எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 5 வது இடத்தில் இருந்த ஷேவாக்கை (8,586) பின்னுக்கு தள்ளினார்.

 

அதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள், மற்றும் 20 ஓவர் போட்டியைச் சேர்த்து) விராட் கோலி ஆடிய 500வது ஆட்டம் இதுவாகும். 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்த முதல் வீரர் விராட் கோலி தான். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 29வது சதத்தை அடித்த விராட் கோலி, டெஸ்டில் அதிக சதங்களை எடுத்தவர்களின் பட்டியலில் 16வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா வீரர் ஜாம்பவான் டான் பிராட்மேனை சமன் செய்துள்ளார்.

 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி 121 ரன்களை எடுத்த விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் 79வது சதமாகப் பதிவானது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்களின் வரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்