ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் பட்டியல் வெளியானதும் பெரிய சர்ச்சை வெடித்தது. இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ரோகித் ஷர்மா பெயர் மூன்று வடிவ கிரிக்கெட் அணியிலும் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே ரோகித் ஷர்மா அணியில் சேர்க்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சில தினங்களுக்கு முன்னால் இது குறித்து ரோகித் ஷர்மா விளக்கம் அளித்த நிலையில், முதல் முறையாக விராட் கோலியும் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "அணி தேர்வுக்குழு கூடுவதற்கு முன்னர் எங்களுக்கு மின்னஞ்சல் வந்தது. அதில் ரோகித் ஷர்மா ஐபிஎல் போட்டியின்போது காயமடைந்துள்ளார் என்றும் காயத்தின் தன்மை குறித்து அவரிடம் விளக்கப்பட்டது என்றும் ரோகித் ஷர்மா தான் தயாரில்லை என்பதையும் புரிந்துகொண்டார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். அவர் எங்களோடு இணைந்து ஆஸ்திரேலியா பயணிப்பார் என்றுதான் நினைத்தோம். அவர் ஏன் எங்களோடு வரவில்லை என்பதில் எந்தத் தகவலும் இல்லை. இந்த விஷயத்தில் எந்தத் தெளிவுமில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்கும் வேலைகளில் உள்ளார் என்பது மட்டுமே அதன்பிறகு எங்களுக்கு கிடைத்த தகவல். டிசம்பர் 11-ம் தேதி மீண்டும் உடற்தகுதியை நிரூபிக்க உள்ளார். இது குழப்பமாகவும் தெளிவின்மை நிறைந்த விஷயமாகவும் உள்ளது. காயமடைந்த சஹா ஆஸ்திரேலியாவில் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிகள் தொடங்கும்முன் தன்னைத் தயார்படுத்த அவர் சரியான பாதையில் செல்கிறார். அதே போல ரோகித் ஷர்மாவும், இஷாந்த் ஷர்மாவும் ஆஸ்திரேலியா வந்திருந்து உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் இருந்தால் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்" எனக் கூறினார்.