சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து கடந்த 7 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ் போகத் இனி என்னிடம் போராடச் சக்தியில்லை என்று கூறி மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே சமயம் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்ட வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.
இந்த வழக்கு கடந்த 9 ஆம் தேதி மாலை நீதிபதி அனபெல் பெனட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடத்திய தீர்ப்பாயம் நேற்று (13.08.2024) 3வது முறையாகத் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் தீர்ப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி (16.08.2024) இரவு 09.30 மணிக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினேஷ் போகத் மனுவைத் தள்ளுபடி செய்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.