ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் கே. எல்.ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால் பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்கு பதிலாக 19 வயதே ஆன சுப்மான் கில் மற்றும் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். விஜய் சங்கர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியில் இணைந்து கொள்வார். சுப்மான் கில் நியூசிலாந்து தொடரில் அணியில் இணைவார்.
தேர்வு செய்யப்பட்ட அன்று இரவு ஒரு மணியளவில் இந்திய அணிக்கு தேர்வான செய்தி வந்தது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தியை கேட்டு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்தேன். ஆனால் சில நிமிடங்கள் கழித்து இணையதளத்தில் பார்த்து விஜய் சங்கர் மற்றும் என்னை தேர்வு செய்ததை நான் உறுதி செய்து கொண்டேன் என சுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய ஏ அணி, இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் வென்ற இந்திய பி அணி, நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் வென்ற இந்திய ஏ அணி, உள்நாட்டில் நடைபெற்ற தியோதர் போட்டியில் வென்ற இந்திய சி அணி ஆகியவற்றில் அதிக பங்களிப்பு அளித்த சுப்மான் கில்லின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட உலககோப்பை தொடரில் 372 ரன்கள் மற்றும் 124 சராசரி எடுத்து தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
2018-2019 ரஞ்சிகோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடிய சுப்மான் கில் 9 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1089 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு இளம் வீரராக அனைத்து திறமைகளும் அவருக்கு உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் சுப்மான் கில் ஒரு சிறந்த வீரராக இருப்பார் என்று யுவராஜ் சிங் கூறியிருந்தார்.
சுப்மான் கில் ப்ரித்வி ஷாவை விட சிறந்த வீரர், இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரின் ஆட்டத்தை கலந்து விளையாடக்கூடியவர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருந்தார்.
இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆட்டங்களை முடிக்க விஜய் சங்கரின் திறமையை நம்புகிறார். சங்கர் 5-வதாக பேட்டிங் செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று டிராவிட் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி டி-20 தொடரில் கடைசி போட்டியில் விஜய் சங்கர் கடைசி ஓவரில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடினார். இதனால் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டு சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்தனர். ஆனால் ராகுல் டிராவிட் சங்கரின் திறமைகளை நம்பியதால் இந்தியா ஏ அணிக்கு விளையாடுவதில் அதிக நம்பிக்கையளித்தார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற 300 ரன்கள் தேவைப்படும் போது விஜய் சங்கர் நான்காவது இடத்தில் பேட் செய்து, 87 ரன்கள் எடுத்தது அணி வெற்றி பெற உதவியாக இருந்தது. மற்றொரு ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
விஜய் ஹசாரே டிராபியில் ஒரு போட்டியில் நான்கு முதல் ஐந்து ஓவர்கள் பந்து வீசினாலும் ரஞ்சி டிராபியில் போட்டிகளில் அதிக ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைத்தது. விளையாட்டில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சமமான முக்கியத்துவம் கொடுக்கிறேன். நிறைய அனுபவம் கிடைத்தன. கடினமாக உழைத்து மனநிறைவுடன் உணர்கிறேன். நான் உலகக் கோப்பை தொடர் பற்றி நினைக்கவில்லை. அப்படி நினைத்துக்கொண்டால் என்னால் சுதந்திரமாக விளையாட முடியாது. நான் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சங்கர் கூறியுள்ளார்.