Skip to main content

இந்திய ஒலிம்பிக் வீராங்கனை ஏற்படுத்திய சர்ச்சை - விளக்கம் கேட்க தயாராகும் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

manika batra

 

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றவர் மாணிகா பத்ரா. டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்பே தனது தனிப்பட்ட பயிற்சியாளரை போட்டி நடக்கும் மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து மாணிகா பத்ரா, தனது போட்டியின்போது இந்திய அணியின் பயிற்சியாளரைப் புறக்கணித்தார்.

 

தான் விளையாடியபோது அணியின் பயிற்சியாளரிடமிருந்து எந்த அறிவுரையையும் பெறவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், அணியின் பயிற்சியாளரைப் புறக்கணித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு மாணிகா பத்ராவிற்கு நோட்டீஸ் அனுப்ப இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

 

இதுதொடர்பாக இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், "டோக்கியோவிற்குப் புறப்படுவதற்கு முன்பே, தனது தனிப்பட்ட பயிற்சியாளர் போட்டி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என்பது மாணிகா பத்ராவிற்கு நன்றாக தெரியும். எனவே அவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. மாணிகா பத்ராவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம். விளக்கமளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். விளக்கத்தைப் பொறுத்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவுசெய்வோம்" என தெரிவித்துள்ளார்.