ஐபிஎல் ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும், சுரேஷ் ரெய்னாவை வாங்கவில்லை. இதன்காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுரேஷ் ரெய்னாவை வாங்காததற்காக சென்னை அணியை, அந்த அணியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ”ரெய்னா இல்லை என்பது எங்களுக்கு மிகவும் கடினமாகத்தான் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அணியின் அமைப்பு என்பது வீரரின் ஃபார்மை பொறுத்தும், எந்த மாதிரியான அணியை வைத்திருக்க வேண்டும் என நிர்வாகம் விரும்புகிறது என்பதைப் பொறுத்தும் உள்ளது. அவர் இந்த அணிக்கு பொருந்தமாட்டார் என நினைத்தற்கு அதுவும் ஒரு காரணம்” எனத் தெரிவித்தார். அவரின் இந்த கருத்தும் ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இந்தநிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா, சமையல் கலைஞராக விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்கப்படாத நிலையில் அடுத்த கட்டம் அரசியலில் இணைவதா என்ற கேள்விக்கு பதிலளித்த ரெய்னா, ”கிரிக்கெட்தான் எனது ஒரே காதல். நான் கிரிக்கெட்டில் தொடர்ந்து பயணிப்பேன். எனக்கு தெரிந்த விளையாட்டு அதுதான். அரசியல் எனக்கு அவ்வளவு புரியாது. நான் இப்போது ஒரு நல்ல செஃப்பாகி (சமையல் கலைஞராகி), ஒவ்வொரு சமையலையும் நன்றாக சமைக்க விரும்புகிறேன். அனைத்து இடங்களுக்கும் சென்று வர விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.