முதல் சில போட்டிகளில் கொல்கத்தா அணியின் ஆட்டம் சிறப்பாக இல்லாத பட்சத்தில், அணி நிர்வாகம் கேப்டனை மாற்ற வாய்ப்பிருக்கிறது என இந்திய அணியின் மூத்த வீரரும், ஐபிஎல் வர்ணனைக் குழுவில் ஒருவருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நாளை ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியுடன் மோதுகிறது. இரு அணி வீரர்களும் இதற்கான பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான கவாஸ்கர் கொல்கத்தா அணி குறித்தான தன் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர், "கொல்கத்தா அணி சிறந்த பேட்டிங் வரிசை உடைய அணி. அவ்வணியில் அதிரடியான வீரர்கள் நிறைய உள்ளனர். இயான் மோர்கன் வருகை அவர்களுக்கு கூடுதல் பலத்தை தரும். முதல் சில போட்டிகளில் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடாத பட்சத்தில், அணி நிர்வாகம் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் ஒப்படைக்கவும் வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.