மும்பையைத் தாண்டி கொஞ்சம் யோசியுங்கள் என கே.எல்.ராகுல் விவகாரத்தில் கருத்து கூறிய சஞ்சய் மஞ்ச்ரேக்கரை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கண்டித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் விளையாடும் வீரர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பெயர் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிருப்தி தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்தை கண்டித்து பேசுகையில், "சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் விஷயங்கள் குப்பை. அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கே.எல்.ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். அதே நேரத்தில் இதே கே.எல்.ராகுல்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி சதமடித்தார். அவர் வேகப்பந்துவீச்சை திறம்பட சமாளித்து விளையாடக்கூடியவர். சஞ்சய் மஞ்ச்ரேக்கரால் மும்பையைத் தாண்டி சிந்திக்க முடியாது. அவர் போன்ற ஆட்களுக்கு எல்லாமே மும்பைதான். மும்பைக்கு வெளியே இருந்து வரும் வீரர்கள் குறித்தும் அவர்கள் யோசிக்க வேண்டும்" எனக் கூறினார்.