Skip to main content

ரன்களை குவித்த இலங்கை; போராடித் தோற்ற இந்தியா

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

Sri Lanka who accumulated runs; India lost the fight

 

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில் புனேவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினர். 8 ஓவர்களில் 80 ரன்களை சேர்த்த நிலையில் குஷால் மெண்டிஸ் 52 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 

 

இதனைத் தொடர்ந்து ராஜபக்ஸா 2 ரன்களில் வெளியேற நிசன்காவும் 33 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் அசலன்காவும் ஷனகாவும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷனகா 56 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்களையும் அக்ஸர் படேல் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

 

207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் 51 ரன்களை எடுத்து வெளியேற, கேப்டன் ஹர்திக் மற்றும் ஹூடா சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இறுதியில் அக்ஸர் படேல் அதிரடி காட்டி 31 பந்துகளில் 65 ரன்களை எடுத்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக இலங்கை கேப்டன் ஷனகா தேர்வு செய்யப்பட்டார்.

 

இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோற்றதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.