Skip to main content

அவரின் சாதனைகளை ஒருபோதும் எங்களிடம் சொன்னது இல்லை – முன்னாள் வீரரை புகழும் சுப்மான் கில்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

ஒரு வீரராக டிராவிட் சர்வதேச கிரிக்கெட் விளையாடியபோது மற்ற வீரர்களின் அணுகுமுறைக்கும், டிராவிட்டின் அணுகுமுறைக்கும் பல வேறுபாடுகள் இருந்தது. அதேபோல இன்று பயிற்சியாளராக உள்ள டிராவிட்டிற்கும், மற்ற பயிற்சியாளர்களுக்கும் நோக்கங்கள் வேறுபடுகின்றன. கடந்த வருடம் இந்திய அண்டர் 19 அணி உலகக்கோப்பையை வென்றபோது, டிராவிட் அந்த வெற்றியை  அணுகிய முறை மிகவும் பாராட்டத்தக்கது. 

 

shubman gill

 

வெற்றி பெற்ற இந்த அண்டர் 19 அணியிலிருந்து அதிகளவு வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம்பெற்று நன்றாக விளையாடி இந்திய அணியை உலகின் சிறந்த அணியாக முன்னிறுத்த வேண்டும். அண்டர் 19 அணியின் உலகக்கோப்பை வெற்றி அப்போதுதான் உண்மையான வெற்றியாக கருதப்படும் என்றளவில் கூறி வீரர்களை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தினார் டிராவிட்.

 

ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட் என்று அவர்களின் வளர்ச்சிக்கு டிராவிட்டிற்கு கிரெடிட் கொடுக்கும் இளம் வீரர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்த விஜய் சங்கர், சுப்மான் கில் ஆகியோரும் டிராவிட்டின் பங்களிப்பை எடுத்து கூறினர். சுப்மான் கில், கடைசி ஒரு ஆண்டு சிறந்த காலகட்டம்.  இந்திய அண்டர்-19 அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் மூலம் எவ்வாறு பொறுமையாக விளையாட வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் என்பதைப் பற்றி இளம் நட்சத்திர வீரர் சுப்மான் கில் கூறியுள்ளார். 

 

ராகுல் டிராவிட் உடனான அனுபவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒரு இளைஞனாக எப்போதும் தொலைக்காட்சியில் டிராவிட்டின் பேட்டிங்கை  பார்ப்பேன். அதை பற்றி எனது  தந்தையிடம்  விவாதிப்பேன். டிராவிட் ஒரு பயிற்சியாளராக எனது விளையாட்டை நன்கு புரிந்துகொள்கிறார். நீங்கள் டிராவிட்டிடம் எதையாவது விவாதிக்க விரும்பினால் அவர் எப்பொழுதும் தயாராக இருக்கிறார் என்று சுப்மான் கில் குறிப்பிட்டுள்ளார்.  

 

shubman gill

 

எனது குழந்தை பருவ நாட்களில் இருந்து வான்வழி ஷாட்களை பயிற்சி செய்திருக்கிறேன். இந்த மாதிரியான ஷாட்கள் விளையாடுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். 2017-ஆம் ஆண்டில், மும்பையில் நடைபெற்ற 18 வயதினருக்குட்பட்ட போட்டியில்  இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடியபோது, முதல் இரண்டு போட்டிகளில் நான் வான்வழி ஷாட்கள் விளையாடுவதை டிராவிட் பார்த்தார். அந்த போட்டிகளில்  35 மற்றும் 37 ரன்கள் மட்டுமே எடுத்தேன். ஆனால் ராகுல், வான்வழி ஷாட்கள் விளையாடும் போது மிகவும் சாதுரியமாகவும், தேவைக்கு ஏற்பவும் விளையாட வேண்டும் என்று சொன்னார். இது எனக்கு உதவியாக இருந்தது என்று ஒருமுறை கில் கூறினார். அடுத்த இரண்டு போட்டிகளில் கில் 138 மற்றும் 160 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது பொறுமையும், அமைதியும். விளையாடும்போது நாங்கள் செய்யும் தவறுகளை பார்த்தால் உடனடியாக அதுகுறித்து சில அறிவுரைகள் வழங்குவார். ஒருபோதும் டிராவிட் அவரின் சாதனைகளை பற்றி எங்களிடம் சொன்னது கிடையாது என்று கில் டிராவிட்டை பற்றி தெரிவித்துள்ளார். டிராவிட் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 24,208 ரன்கள் எடுத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்துள்ளார். 

 

shubman gill

 

டிராவிட் இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தின் மூலம் பயிற்சியளித்து இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகிறார். நியூசிலாந்தில் நடந்த ஐ.சி.சி. அண்டர் 19 உலகக்கோப்பையை இந்தியா நான்காவது முறை வென்றபோது பயிற்சியாளராக டிராவிட் இருந்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் தொடர் நாயகன் விருதை பெற்றார். பின்னர் கில் ஐ.பி.எல்., இந்தியா ஏ அணி, ரஞ்சி போட்டிகளில் பஞ்சாப் அணி மற்றும் 2019-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என அடுத்தடுத்து முத்திரை பதித்து வருகிறார்.