ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி10 லீகின் இரண்டாவது சீசனில் ராஜ்புத் மற்றும் சிந்தி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஷேன் வாட்சனின் சிந்தி அணி பத்து ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ராஜ்புத் அணியின் முனாஃப் படேல் இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
பின்னர், ராஜ்புத் அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் முகமது சேஷாத் இணை தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. குறிப்பாக முகமது சேஷாத் முதல் ஓவர் வீசிய முகமது நவாஸின் பந்துகளை நாலாப்புறமும் பறக்கவிட்டார். அதன்பிறகு பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர், திசாரா பரேரா மற்றும் ஃபவாத் அகமது ஆகியோரின் பந்துகளையும் அவர் சிக்சர்கள் பறக்கவிட்டார்.
பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சமும் நேரம் கொடுக்காமல் அதிரடி காட்டும் மெக்கல்லம் எதிர்முனையில் வியப்பில் இருக்க, மொத்த பந்துகளையும் சேஷாத்தே எதிர்கொண்டார். மெக்கல்லம் 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். 12 பந்துகளில் அரைசதம் கண்ட சேஷாத் 16 பந்துகளில் 74 ரன்களை எளிமையாகக் கடந்து போட்டியில் ராஜ்புத் அணியை வெற்றிபெறச் செய்தார். அதில் எட்டு சிக்சர்களும், ஆறு பவுண்டரிகளும் அடக்கம்.
வெறும் 4 ஓவர்களில் வெற்றி இலக்கை அசால்ட்டாக கடக்க அதிரடியாக ஆடிய சேஷாத்தின் ஆட்டம், EA Sports வீடியோ கேமை விடவும் வேகமாக இருந்ததாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சேஷாத்தின் இந்த ஆட்டத்தால் மிரட்சியில் இருந்த சிந்தி அணியின் கேப்டன் சேன் வாட்சன், ஒவ்வொரு பந்து பவுண்டரியை நோக்கி சீறும்போதும் சிரித்தபடியே இருந்தார்; வேறென்ன செய்திருக்க முடியும்.