ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் விளையாடுவது இந்திய வீரர்களுக்கு பிரச்சனையாக இருக்கலாம் என நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் இந்த மாதம் 19-ம் தேதி தொடங்க இருக்கிறது. அமீரகத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறுவதால் ரசிகர்கள் இத்தொடரின்போது மைதானங்களில் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்கள் இன்றி நடைபெறும் போட்டி எந்த அளவிற்கு வரவேற்பை பெறப்போகிறது என்பதும் சற்று கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் மூத்த வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெறுவது வெளிநாட்டு வீரர்களுக்கு பெரிய அளவில் சிக்கலாக இருக்காது. அவர்கள் வழக்கமாகவே வெறும் மைதானங்களிலோ அல்லது ரசிகர்கள் குறைவான மைதானங்களில் தான் விளையாடி வருகிறார்கள். இந்திய வீரர்கள் விளையாடி வரும் சூழல் முற்றிலும் வேறானது. இது அவர்களைத் தடுமாறச் செய்யுமா என்று தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும். ரசிகர்கள் மூலம் கிடைக்கும் உற்சாகத்தை அவர்கள் வேறு வழியில் தேடிக்கொள்வார்கள்" என்றார்.