இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான சாரா டெய்லர் சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகசிறந்த விக்கெட் கீப்பராகவும், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய வீராங்கனையாகவும் வலம் வந்தவர் சாரா. கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் தவித்து வந்த அவர், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை குறைத்துக்கொண்டார். மகளிர் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆடையில்லாமல் இவர் கிரிக்கெட் விளையாடுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் சாரா.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் சாரா, இதுவரை 10 டெஸ்ட் போட்டிகள், 126 ஒருநாள் போட்டிகள் மற்றும் 90 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் அடித்த வீராங்கனை என பல சாதனைகளை படைத்த சாராவின் திடீர் ஓய்வு இங்கிலாந்து ரசிகர்களை மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.