ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் ஒரு துவக்க வீரராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27 -ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் குறித்தும், இந்திய அணியில் விராட் கோலியின் இடம் குறித்தும் பேசியுள்ளார்.
அதில் அவர், "டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் ஒரு துவக்க வீரராக இருப்பார். ரோகித் ஷர்மா உடற்தகுதியுடன் இருந்தால், அவர்தான் இறங்க வேண்டும். மற்றொரு வீரராக ப்ரித்திவ் ஷா அல்லது கே.எல்.ராகுலை தேர்வு செய்வது என்பது யார் சரியான ஃபார்மில் உள்ளார்கள் என்பதைப் பார்த்து அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு" என்றார்.
மேலும் விராட் கோலி குறித்துப் பேசுகையில், "விராட் கோலி அணியில் இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம். நிறைய திறமையாளர்கள் நம்மிடம் வெளியே உள்ளனர். எனவே இது பிற வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்ள சரியான சந்தர்ப்பமாக அமையும்" எனக் கூறினார்.
டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என வெளிநாட்டுத் தொடருக்கான மூன்றுதரப்பட்ட கிரிக்கெட் அணியிலும் மயங்க் அகர்வால் இடம்பிடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.