மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் ரஸல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன இவர், ஐபிஎல் போன்ற மற்றொரு தொடரான கரீபியன் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார்.
இந்த தொடரில் ஜமைக்கா தல்லாவாஹ்ஸ் - செயின்ட் லூசியா சூக்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஜமைக்கா அணிக்காக விளையாடிய ரஸல் 14 ஆவது ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். வேகப் பந்துவீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோன் ஷார்ட் வீசிய அந்த ஓவரில் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட அவர், மூன்றாவது பந்தை அடித்து விளையாட முயன்றார். அப்போது பந்து அவர் தலையில் பலமாக அடித்தது.
ஹெல்மெட் அணிந்திருந்த போதும் பந்து அடித்ததும் வலிதாங்க முடியாமல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார் ரஸல். எழுந்து நடக்க கூட சிரமப்பட்ட அவரை உடனடியாக ஸ்ட்ரச்சர் மூலமாக தூக்கி சென்றனர். பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதிரடி வீரரான ரஸல் பந்து தாக்கி மைதானத்திலேயே சரிந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.