ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 66 ரன்களும் எடுத்தனர். தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, ஆறாவது விக்கெட்டிற்கு இணைந்த ஹர்திக் பாண்டியா-ஜடேஜா இணை தூக்கி நிறுத்தியது.
இந்த இணை 108 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் குவித்தது. இது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 -ஆவது விக்கெட்டிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்பு, 1999 -ஆம் ஆண்டு ராபின் சிங் மற்றும் சதகோபன் ரமேஷ் இணை எடுத்த 123 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதன்மூலம், 21 வருடச் சாதனையானது ஹர்திக் பாண்டியா-ஜடேஜா இணையால் முறியடிக்கப்பட்டுள்ளது.