இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஜடேஜா மற்றும் கே.எல் .ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இப்போட்டியின்போது, ஜடேஜாவின் தலையில் பந்து தாக்கியது. மேலும் அவருக்கு தசைபிடிப்பும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜடேஜாவுக்கு மாற்றாக சஹால் களமிறங்கினார்.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், போட்டிக்கு இடையே இந்திய மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், ஜடேஜாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. ஜடேஜா தொடர் கண்காணிப்பில் இருப்பார், சனிக்கிழமை (இன்று) மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அப்போது தேவைப்பட்டால் அவருக்கு கூடுதல் ஸ்கேன்களும் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், காயம் மற்றும் தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜா, தற்போது நடைபெற்றுவரும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பி.சி.சி.ஐ. அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.