நான் நலமாக உள்ளேன் என தன் காயம் குறித்து ரோகித் ஷர்மா கூறிய கருத்து ரசிகர்களை மீண்டும் குழப்பமடையச் செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் ஷர்மாவிற்கு, கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, கடந்த சில போட்டிகளில் களமிறங்காத ரோகித் ஷர்மா ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் களமிறங்கினார். இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா புறப்படும் இந்திய அணியில் ரோகித் ஷர்மா பெயர் இடம்பெறாததற்கு அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், காயம் குறித்து ரோகித் ஷர்மா கூறியுள்ள கருத்து ரசிகர்களை மீண்டும் குழப்பமடையச் செய்துள்ளது.
டாஸ் நேரத்தில் காயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோகித் ஷர்மா, "நான் நலமாகவும், சரியான உடற்தகுதியுடன் உள்ளது போலவும்தான் தெரிகிறது" எனக் கூறினார்.
இவ்வருட இறுதியில் நடைபெறும் ஒரு தொடருக்கான அணி தேர்வில், தற்போதுள்ள காயத்தை கருத்தில் எடுத்துக்கொண்டது ஏன், ரோகித் ஷர்மாவை தேர்வு செய்யாதது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், காயம் காரணமாக ரோகித் ஷர்மா அணியில் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ கூறியதும், முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன் என காயம் குறித்து ரோகித் ஷர்மா கூறியதும் ரசிகர்களை மேலும் குழப்பமடையச் செய்துள்ளது. தற்போது இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.