13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்று, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றன. இது கொல்கத்தா அணிக்கு முதல் போட்டியாகும். மும்பை அணி தன்னுடைய முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்டு தோல்வியைச் சந்தித்தது. இதனால், இரு அணிகளும் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கோடு பயிற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்போட்டியிலோ அல்லது அடுத்து வரும் சில போட்டியிலோ, மும்பை அணி வீரர் ரோகித் ஷர்மா புதிய சாதனையைப் படைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் 5,000 ரன்கள் எடுப்பது என்பது தற்போது வரை ஒரு மைல்கல்லாக உள்ளது. சென்னை அணியைச் சேர்ந்த ரெய்னா, முதல்முதலாக இதை எட்டிப்பிடித்தார். இரண்டாவதாக பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி இதைச் சாத்தியமாக்கினார். தற்போது, இவர்களுடன் இந்தப் பட்டியலில் இணைவதற்கான வாய்ப்பு மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மாவிற்கு உருவாகியுள்ளது. அவர் 189 போட்டிகளில் விளையாடி, 4,910 ரன்களைக் குவித்துள்ளார். இன்னும் 90 ரன்களே தேவைப்படுவதால் விரைவில் இச்சாதனையை ரோகித் ஷர்மாவும் எட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.