பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் டெஸ்ட் தொடரில், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. லார்ட்ஸ் போட்டி நீங்கலாக மற்ற நான்கு போட்டிகளிலும், இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் நழுவ விட்டிருக்கிறது.
இந்நிலையில், தொடரை இழந்திருந்தாலும் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி, எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக ரன்குவித்த இங்கிலாந்து வீரர்களை பெவிலியன் அனுப்ப இந்திய அணி தவறிவிட்டது. அதேபோல், சொதப்பலாக தொடங்கி இருந்தாலும் ஆட்டத்தின் ட்ராக்கைப் பிடிக்க உதவிய ராகுல், பாண்ட் இணைக்குப் பிறகு யாரும் அதை வலுசேர்க்கவில்லை. இதன்மூலம், இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முடித்துக் கொண்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் இந்திய அணி தோற்றிருக்கிறது. தொடர்ந்து வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த இந்திய அணிக்கும், கேப்டன் விராட்டுக்கும் இது மிகப்பெரிய சவாலாகவே பேசப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய விராட் கோலி, “வெற்றி பெறுவதற்காக எங்களுக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் நாங்கள் தவற விட்டுவிட்டோம். கோப்பை உறுதியான மனநிலையில் இங்கிலாந்து அணியினர் கூலாக விளையாடியது தெரிந்தது. அதுவே, அவர்கள் வெற்றி பெறுவதற்கும் போதுமானதாக இருந்தது. இந்தத் தொடரை இழந்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நாங்கள் இடம் பிடித்திருக்கிறோம். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான குக் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு மனநிறைவான வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.