ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் முழுமையாக விளையாடவுள்ள விராட் கோலி, டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடைபெறும் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பவுள்ளார். தன்னுடைய மனைவியின் பிரசவ காலத்தின் போது உடனிருக்கவேண்டும் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அதற்கான அனுமதியை பிசிசிஐ வழங்கியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இது குறித்துப் பேசுகையில், "விராட் கோலி சரியான முடிவெடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்தத் தருணம் மீண்டும் கிடைக்காது. அவருக்கான வாய்ப்பு அமைந்துள்ளது. அதனால் இந்தியா திரும்புகிறார். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன். அவரது இருப்பை அனைவரும் தவறவிடுவர். கஷ்ட காலங்களில்தான் புதிய வாய்ப்புகள் திறக்கும். நமது அணியில் நிறைய இளம்வீரர்கள் உள்ளனர். இது அவர்களுக்கு சரியான வாய்ப்பாக அமையும்" எனக் கூறினார்.