Skip to main content

தோனி குறித்த யுவராஜ் சிங்கின் கருத்துக்கு ரெய்னா எதிர்ப்பு...

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

raina's response to yuvraj's comment on dhoni's captaincy

 

 

இந்திய அணியில் விளையாடும்போது ரெய்னாவுக்கு தோனி ஆதரவாக இருந்ததாக யுவராஜ் சிங் கூறியதற்கு ரெய்னா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பேசிய யுவராஜ் சிங் 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் மீண்டும் தான் வந்தது எப்படி என்பது குறித்த நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அப்போது பேசிய அவர், "சுரேஷ் ரெய்னாவிற்கு அப்போது பெரிய ஆதரவு இருந்தது. ஏனென்றால் தோனி அவரை அணிக்குள் கொண்டுவர விரும்பினார். அனைத்து கேப்டன்களுக்கும் தங்களுக்கு பிடித்தமான வீரரை அணிக்குள் கொண்டு வரவே விரும்புவர்.  அப்படித்தான் தோனி ரெய்னாவை அணிக்குள் கொண்டுவர நினைத்தார். அந்த சமயத்தில் யூசுஃப் பதானும் நன்றாக விளையாடினார். நானும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாகப் பங்காற்றினேன். ஆனால் ரெய்னா அப்போது ஃபார்மில் இல்லை. மேலும், அப்போது அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் ஸ்பின்னரின் தேவை இருந்தது. எனவே வேறுவழியின்றி என்னை அணிக்குள் சேர்த்தனர்" எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் யுவராஜின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள ரெய்னா, "ஆம் தோனி எனக்குக் கண்டிப்பாக ஆதரவு தெரிவித்தார். ஏனென்றால் என்னிடம் திறமை இருப்பதை அவர் அறிந்திருந்தார். அந்த நம்பிக்கையை நான் உண்மையும் ஆக்கினேன். இந்திய அணியாக இருந்தாலும், சிஎஸ்கேவாக இருந்தாலும் இதுதான் நிலை. தோனி எப்போதும் ஒருவருக்கு 2 போட்டிகளில் வாய்ப்பளிப்பார். அவ்வாறு வாய்ப்பு கொடுக்கும்போதே, சரியாக ஆடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது என்று கூறிவிடுவார். அந்த வகையில் தான் நானும் தோனியிடம் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்று, அதில் என்னை நிரூபித்தேன். உங்களுக்கு (யுவராஜ் சிங்) தெரியும் மிடில் ஆர்டரில் விளையாடுவது எளிதானதல்ல. களமிறங்கினால் 10-15 ஓவர்கள் ஆட வேண்டும். சில நேரங்களில் 30 ஓவர்கள் கூட ஆட நேரிடும். அத்துடன் 2 அல்லது 3 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். மேலும், 15-20 ரன்களையும் சேமித்துக்கொடுக்க வேண்டும். இதெல்லாம் கடினமான ஒன்றுதான். ஆனால் சவாலான இந்த விஷயம் எனக்கும் பிடிக்கும். அதை நான் நல்வாய்ப்பாகவே எடுத்துக்கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.