கரோனா நோய்த்தொற்று காலம் ஆண்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா, கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி, அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொந்தக் காரணங்களுக்காக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சென்னை அணி நிர்வாகத்திற்கும், ரெய்னாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றொரு தகவலும் நிலவுவதால், சென்னை அணியில் ரெய்னாவின் எதிர்காலம் குறித்து பெரும் கேள்வியெழுந்துள்ளது.
சர்வதேச ஆண்கள் தினமான இன்று, ஆண்கள் வாழ்க்கையில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ரெய்னா பேசுகையில், "கரோனா காலம் பல ஆண்களின் வாழ்க்கை முறையையும் பொறுப்பையும் மாற்றிவிட்டது. இதற்கு முன்பு நிறைய ஆண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழித்திருக்க மாட்டார்கள். தற்போது, குழந்தைகளுடன் நேரம் செலவிட, சமைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட, வீடியோ கேம் விளையாட, உடன் இருப்பவர்களுடன் சண்டையிட என அதிக நேரத்தை இந்தக் கரோனா காலம் ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறினார்.