டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதனையடுத்து இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 27 ஆம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த கிரிக்கெட் தொடரில் இருந்து கம்பீர் இந்த பொறுப்பை ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து கவுதம் கம்பீர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்குச் சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். கிரிக்கெட்டில் தற்போது வித்தியாசமான தொப்பி அணிந்தாலும், கிரிக்கெட் விளையாட்டிற்குத் திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 1.4 பில்லியின் இந்தியர்களின் கனவுகளை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் கௌரவ செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் கௌதம் இந்த மாறிவரும் சூழலில் அருகில் இருந்து பார்த்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, பல்வேறு நேரங்களில் சிறந்து விளங்கியதால் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.