புரோ கபடி: குஜராத் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐதராபாத், நாக்பூர், ஆமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெற்று முடிந்தன.
நேற்று நடைபெற்ற 94-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும், ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி நான்காவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கியது. போட்டியின் முதல் பாதியில் குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்காரணமாக முதல் 20 நிமிட முடிவில் குஜராத் அணி 20-13 என முன்னிலை வகித்தது. இதனால் இந்த போட்டியில் குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.
இருப்பினும் தமிழ் தலைவாஸ் அணியினர் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இரண்டாம் பாதியில் களமிறங்கினர். இதன் காரணமாக தமிழ் தலைவாஸ் அணியினர் கவனத்துடன் விளையாடி புள்ளிகள் சேர்த்தனர். இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்று அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 13 தொடுபுள்ளிகள் எடுத்தார்.