Skip to main content

சர்வதேசப் போட்டிகளில் சொதப்பல்; உள்ளூர்ப் போட்டிகளில் சரவெடி கம்பேக்! - அதிரடி காட்டும் இந்திய வீரர்!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

PRITHVI SHAW

 

இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான 'விஜய் ஹசாரே' கோப்பை போட்டிகள், கடந்த 20 ஆம் தேதி தொடங்கின. மொத்தம், 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் சென்னை, சூரத், பெங்களூர், ஜெய்ப்பூர், இந்தூர், கொல்கத்தா ஆகிய 6 இடங்களில் நடைபெற்றுவருகிறது.

 

இத்தொடரில், இன்று மும்பை அணி, சவுராஷ்டிரா அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா, ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ப்ரித்விஷா ஆகியோர் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுமையாக ஆட, ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா சதமடித்தார். இந்த சதத்தின் மூலம் 41.5 ஓவர்களிலேயே மும்பை அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது. மேலும் 'விஜய் ஹசாரே' தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறியது. ப்ரித்வி ஷா 123 பந்துகளில், 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

சர்வதேசப் போட்டிகளில் சொதப்பியதால் இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட ப்ரித்வி ஷா, தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மொத்தம் இரண்டு சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும் விளாசி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.