தனிநபராக தோனியால் என்ன செய்ய முடியும் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யன் ஓஜா தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இதுவரை மொத்தம் 18 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இத்தொடரின் தொடக்கம் பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரு வெற்றிகளும், மூன்று தோல்விகளும் கண்டுள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் எழுச்சி பெற்று 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள சென்னை அணி வீரர்கள், வரவிருக்கும் போட்டிகளிலும் வெற்றியைத் தொடரும் முனைப்பில் உள்ளனர். சென்னை அணியின் கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, தோனியின் ஆட்டம் குறித்தும், அவரது தலைமைப்பண்பு குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான பிரக்யன் ஓஜா தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. அதில், தோனியால் தனி நபராக என்ன செய்ய முடியும். அவரால் எப்போதும் ரன்கள் குவிக்கவோ, அணியை வழிநடத்தவோ முடியாது. அனைவரும் தங்களது பங்களிப்பினை அளிக்க வேண்டும். தோனி ஒவ்வொரு கட்டத்திலும் தன்னால் முடிந்ததை சிறப்பாக செய்திருக்கிறார்" எனக் கூறினார்.