ஜம்மு காஷ்மீரில், இம்மாத தொடக்கத்திலிருந்தே தீவிரவாதிகள் குடிமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதுவரை 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.10.2021) பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தொழிலாளர்களின் கொலைக்குப் பொறுப்பேற்றுள்ள லஷ்கர்-இ-தொய்பா சார்பு இயக்கமான ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத குழு, ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு புலம்பெயர் தொழிலாளர்களை எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் உயிருக்குப் பயந்து ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் மக்களைக் குறி வைத்து நடத்தப்படும் தாக்குதலுக்குப் பல்வேறு தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், பொதுமக்கள் கொலை செய்யப்படுவதற்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடக்கூடாது என வலியுறுத்திவருகின்றனர்.
இதுதொடர்பாக பீகார் மாநில துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், "இதுபோன்ற விஷயங்கள் (இந்தியா - பாகிஸ்தான் போட்டி) நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தால் இந்தியா எந்த விஷயத்திலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்காது என்ற செய்தி கிடைக்கும்" என கூறியுள்ளார்.
அதேபோல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "(இரு நாடுகளுக்கும் இடையேயேயான) உறவுகள் சரியாக இல்லையென்றால், இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "பயங்கரவாதத்தின் விற்பனையாளர் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்த என்ன அவசரம்? பிசிசிஐயின் ஜெய் ஷாவுக்கு அவரது தந்தை உள்துறை அமைச்சராக என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? துபாய் தாதாக்களுக்குப் பந்தயம் கட்டி பணம் சம்பாதிப்பதற்கு கிரிக்கெட் விளையாடுவது கட்டாயமாகும். எனவே இந்தக் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்து நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்றுங்கள்" என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் பிசிசிஐயின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா, ஐசிசி தொடர் என்பதால் பாகிஸ்தானோடு விளையாட மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கொலைகளை நங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டியைப் பொறுத்தவரை (இந்தியா - பாகிஸ்தான்) ஐசிசியின் சர்வதேச உறுதிமொழியின் கீழ், யாருக்கும் எதிராக விளையாட முடியாது என மறுக்க முடியாது. நீங்கள் ஐசிசி போட்டிகளில் விளையாடித்தான் ஆக வேண்டும்" என கூறியுள்ளார்.