2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
சென்னை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும், இந்த ஐபிஎல் தொடருக்கான இந்த ஏலத்தின் ஏல பட்டியலில் 332 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அனைத்து அணிகளும் சேர்த்து மொத்தம் 73 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க வேண்டும். இந்த 73-ல் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்களை எடுக்க முடியும்.
இந்த ஏலத்தின் தொடக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வசம் ரூ.27.85 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடியும், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அனியிடம் ரூ.35.65 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.13.05 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.28.90 கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் அணியிடம் ரூ.27.90 கோடியும் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வசம் ரூ.17 கோடியும், சென்னை அணியிடம் மற்ற அணிகளை விட மிகவும் குறைவாக 14.60 கோடி ரூபாயும் இருந்தது. அதில் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரனை ரூ.5.50 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதனையடுத்து இந்திய சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.