பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்தியாவை சேர்ந்த லியாகத் கானின் மகள் சாமியா அர்சூவை திருமணம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பயணம் செய்ய முடியாததால், நான்கு வருடங்களாகியும் கான் தனது பேத்தியின் குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், தற்போது இத்தனை வருடங்கள் கழித்து அதற்கான நேரம் கைகூடி இருக்கிற செய்தி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்தியா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த லியாகத்தின் மகள் சாமியா அர்சூவை 2019ம் ஆண்டு துபாயில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், சாமியாவால் பாகிஸ்தான் எல்லையை கடந்து இந்தியா பயணித்து தனது குடும்பத்தை பார்க்க முடியாதே சூழலே இருந்துள்ளது. ஹரியான மாவட்டம் நுஹ் மாவட்டத்தில் வசித்து வரும் இவரின் தந்தை லியாகத் காணும் தனது பேத்தியை கையில் ஏந்த முடியவில்லையே என்று ஏங்கும் நிலைக்கு சென்றுள்ளார். ஆனால், ஹசன் அலி தற்போது உலகக் கோப்பை விளையாட இந்தியா வருவதால் தனது மனைவியின் குடும்பத்தை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தது. அதிலும், நசீம் ஷா என்ற பவுலர் காயத்தின் காரணமாக விலகவே ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் தேர்வானார்.
எனவே, தனது மகளின் குடும்பம் இந்தியா வருவது குறித்து லிகாயத் கான் கூறுகையில், ‘எனது நாங்கள் மீண்டும் அகமதாபாத்தில் சந்திப்போம் என நம்புகிறேன். என்னால் பேரக்குழந்தையை கையில் ஏந்தும் வரை காத்திருக்க முடியவில்லை. நான் எனது கல்லூரி காலத்தின் போது படித்த ரூமியின் கவிதையின்படி தான் வாழ்ந்து வருகிறேன். அது, ‘உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள்; கூட்டம் சொல்வதை அல்ல’ என் மகள் சாமியா எமிரேட்ஸ் ஏர்லைனில் விமானப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.
அப்போது, தனது நண்பர் மூலம் ஹசன் அலியை துபாயில் சந்தித்து இருக்கிறாள். பின், ஹசனை பற்றி என்னிடம் தெரிவிக்க, நானும் அவளுடைய முடிவை மறுக்கவில்லை. மகளின் மீது என்னுடைய தீர்மானங்களை திணிக்கையில் நான் கற்ற கல்விக்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? சாமியா படித்தவள், சுதந்திரமானவள். முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை யார் கவனிக்கப் போகிறார்கள்? நீ யாரை திருமணம் செய்துகொண்டாலும் பரவாயில்லை. அவள் கடைசி வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு சென்ற எங்களுடைய குடும்பங்கள் பாகிஸ்தானில்தான் வசித்து வருகின்றனர். ஹசன் அலியும் அன்புள்ளம் கொண்டவர் தான்." என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
மேலும் லியாகத், ஹசன் அலியிடம் இந்திய அணியை சந்திக்க உதவவும் விராத் கோலியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14, அஹமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.