பாரிஸில் சர்வதேச விளையாட்டான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்தியாவுக்கு இதுவரை 5 வெண்கலப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நீச்சல் வீராங்கனையின் அழகு, சக வீரர்களின் கவனத்தை சிதறிடிப்பதாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டியிடம் புகார் அளித்ததையடுத்து அந்த நீச்சல் வீராங்கனை தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீ பட்டர்பிளை நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற,பராகுவே நாட்டைச் சேர்ந்த 20 வயது வீராங்கனை லுவானா அலோன்சோ அரையிறுதியில் தோல்வியடைந்தார். தான் தோல்வியடைந்தாலும், சக வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஒலிம்பிக் கிராமத்திலேயே தங்கியிருந்தார்.
அப்படி தங்கியிருந்த லுவானா அலோன்சோவின் அழகு, மற்ற வீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக சக வீரர் பராகுவே கமிட்டியிடம் புகார் அளித்தார். இதனால், அவரை தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக லுவானா கூறியதாவது, ‘நாம் ஒலிம்பிக் குழுவில் இருந்து அகற்றப்படவோ வெளியேற்றப்படவோ இல்லை. தவறான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்’ எனத் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, நீச்சல் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக லுவானா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், லுவானா அணியும் ஆடை விதமும், மற்றவருடன் பழகும் விதமும் சிலருக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், லுவானா தனது இடுப்பு பகுதியில் ஒலிம்பிக்கின் சின்னத்தை லோகாவாக பொறித்திருந்தது வெளியேற்றத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.