சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருதும், 4 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 4 பேருக்கு தியான்சந்த் விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கினார். அப்போது, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தனக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காட்டி வாழ்த்து பெற்றார். இதன் பின் பிரக்ஞானந்தா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முதல்வரை பார்த்து சமீபத்தில் வாங்கிய அர்ஜுனா விருதை காட்டி வாழ்த்துகளைப் பெற்றேன். ஒலிம்பியாட் போட்டிகளை இங்கு நடத்தி மெடல் வாங்கியவர்களுக்கு பரிசுகளை அதிகமாக கொடுத்தார்கள். மேலும் செஸ் விளையாட்டிற்கு நிறைய உதவிகளை செய்கிறார்கள். அதற்கெல்லாம் நன்றி.
அடுத்த போட்டிக்காக இஸ்ரேல் செல்கிறேன்; அதுதான் எனக்கு அடுத்த இலக்கு. உலக அளவில் நம்பர் 1 என்ற இடத்தைப் பிடிக்க வேண்டும். அதுதான் என் லட்சியம். அதற்கு இன்னும் அதிகமான முயற்சிகளை எடுத்துக் கொண்டு உள்ளேன்.
இந்த வருடம் அதிகளவில் எனக்கு உதவி செய்துள்ளார்கள். அதற்கே மிகப்பெரிய நன்றி. ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டு வீரர்களிடம் நான் அது குறித்து கேட்டேன். அனைத்துமே நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் பற்றி அவர்கள் பேசும்போது மிகப் பெருமையாக இருந்தது” எனக் கூறினார்.