Skip to main content

இந்தியாவுக்கு கிடைத்த புதிய பினிஷர் ஸ்பெஷலிஸ்ட்!....

Published on 26/11/2018 | Edited on 27/11/2018

தோனி இனிமேல் அதே அளவிலான சிறந்த பினிஷர் கிடையாது என்று அசாருதீன் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறி வருகின்றனர். அதே சமயம், இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களான ஷர்மா, தவான், கோலி ஆகியோர் பெரும்பாலான போட்டிகளை வெற்றிகரமாக முடித்து வருகின்றனர். மேலும், கோலி பேட்டிங் கிங்காக மாறியுள்ளார். இருந்தபோதும், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கின் சமீபத்திய ஆட்டங்கள் புதிய புத்துணர்ச்சியை இந்திய அணிக்கு அளித்துள்ளது. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பினிஷர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாறி வருகிறார்.   

 

kk

 

“தினேஷ் கார்த்திக் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருக்கப் போகிறார். குறைந்த அளவு வாய்ப்புகளே அவருக்கு வழங்கப்பட்டது. அதை அவர் சரியாக பயன்படுத்தினார். கார்த்திக் எதிர்காலத்தில் கேப்டனாக இருக்கும் அளவுக்கு நல்ல தலைமை பண்புகளை கொண்டுள்ளார்.” என்று 2007-ஆம் ஆண்டு  முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரெக் சேப்பல் தினேஷ் கார்த்திக் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

 


கிரெக் சேப்பல் அப்போது தெரிவித்திருந்த கருத்து இன்று உண்மையாக மாறி வருகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். தோனிக்கு முன்பிருந்தே இந்திய அணியில் இருப்பவர். இன்றுள்ள இந்திய அணியின் சீனியர் இவர்தான். உண்மையில் இவருடைய திறமை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். 

 

மஹேந்திர சிங் தோனி வருவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கங்குலி கேப்டனாக இருந்தபோது பல விக்கெட் கீப்பர்களை முயற்சி செய்தார். அதில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். அவருடைய பேட்டிங் ஓரளவு இருந்தபோதும், விக்கெட் கீப்பிங் சொல்லும்படி இல்லை. இதனால் தோனி வந்த பிறகு, தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. 

 

ஆரம்ப காலகட்டங்களில் சொதப்பினாலும், தினேஷ் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல பார்மில் உள்ளார். 2017 மற்றும் 2018-ல் 18 டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு ஆடியுள்ளார். அதில் அவர் அடித்த ரன்கள் 252. பேட்டிங் சராசரி 60+, ஸ்ட்ரைக் ரேட் 152+. தான் விளையாடிய 14 இன்னிங்ஸ்களில் 10 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.  

 

டி20-யில் இந்தியா சேசிங் செய்த போது, தினேஷ் கார்த்திக் நாட் அவுட்டாக இருந்த 9 முறையும் இந்திய அணி வென்றுள்ளது. அதில் அவரின் பேட்டிங் சராசரி 74, ஸ்ட்ரைக் ரேட் 141. அவர் அவுட் ஆன 3   போட்டியிலும் தோற்றுள்ளது. 
 

 

kk

 

 

கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். 13 இன்னிங்க்ஸ்களில் 350 ரன்கள் குவித்துள்ளார். 6 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். பேட்டிங் சராசரி 51. 

 

ஐ.பி.எல். போட்டிகளை பொறுத்தவரை இந்த இரண்டு வருடங்களில் 30 போட்டிகளில் 861 ரன்கள் எடுத்துள்ளார். 10 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். பேட்டிங் சராசரி 45, ஸ்ட்ரைக் ரேட் 143. இந்த வருட ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டார். ப்ளே-ஆப் சுற்று வரை அணியை அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தற்போது இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளது. ராயுடு அணியில் இடத்தை உறுதி செய்துள்ளார். மீதம் இருக்கும் ஒரு இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்ப வாய்ப்புகள் அதிகம். டி20–ஐ பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக உள்ளார். 33 வயதாகும் தினேஷ் கார்த்திக் இன்னும் சில வருடங்களுக்கு ஒரு நாள் மற்றும் டி20  போட்டிகளில் இந்தியாவின் பினிஷர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.