சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன்ரைசர்ஸ் அணி சுமாரான ஆட்டங்களையே வெளிப்படுத்தி வந்தது. 2021ல் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி 2022ல் 6 வெற்றிகளை மட்டுமே பெற்றது. ஆனாலும் கூட கடந்த காலங்களில் அனைத்து அணிகளும் சர்ரைசர்ஸ் அணியிடம் பாதுகாப்பான ஆட்டத்தையே விளையாடும். புவனேஷ்வர் குமார், நடராஜன், சந்தீப் சர்மா என வலுவான பந்துவீச்சிலும் நிலையான பேட்டிங் கொண்டும் வலுவான அணியாக சன்ரைசர்ஸ் அணி செயல்பட்டது.
கடந்த வருடம் சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக விளையாட உள்ளார். எனவே அந்த அணிக்கு புதிய கேப்டனை அணி நிர்வாகம் நியமித்துள்ளது. புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மார்க்ரம் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடுபவர். இவர் சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க லீக் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார். இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.