இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்தது டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, ரஹானே மற்றும் புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி, கேமேரான் க்ரீனின் சதத்தின் உதவியோடு 306 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதனைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸை போலவே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸில், டக் அவுட்டான ப்ரித்திவி ஷா, சுப்மன் கில் இந்த இன்னிங்ஸிலும் விரைவாக ஆட்டமிழந்தனர். கடந்த இன்னிங்ஸில் சதமடித்த ரஹானே 28 ரன்களிலும், அரைசதம் அடித்த புஜாரா ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன்பிறகு ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி, 54 ரன்கள் எடுத்தது. மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டம் என்பதால், இந்த போட்டி ட்ராவில் முடிந்தது.