ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும், முதல் டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி, அடிலெய்டில் நடக்கவுள்ளது.
இந்திய - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டிகளில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களைவிட அதிக தலைவலியாக இருந்து வருபவர், அவர்களின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்.
வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது, அவர்களின் ஷூக்களில் உள்ள ஸ்பைக்ஸ்கள் , பிட்சில் ரஃப் பேட்ச்களை உருவாக்கும் (ஷூ ஸ்பைக்குகள் மைதானத்தைச் சேதப்படுத்தி தெறிப்புகள் உள்ளிட்டவற்றை உருவாக்கும்). அதில் படும் பந்துகள், எதிர்பாராத அளவிற்கு எழும்புவதோடு திரும்பும். அந்த ரஃப் பேட்ச்க்களை வெகுத்திறமையாக நாதன் லயன் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை வீழ்த்திவிடுவார்.
எனவே, நாதன் லயனின் பந்து வீச்சை சமாளிக்க, விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள், பயிற்சியின்போது, மைதானத்தில் ரப் பேட்ச்களை உருவாக்கி பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர், செயற்கையாக உருவாக்கப்பட்ட ரஃப் பேட்ச்சில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசி வருகின்றனர்.