இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இரு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிட்னியில் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள், சிட்னியிலிருந்து தங்கள் மாநிலத்திற்குள் வரத் தடை விதித்து வருகின்றன. மேலும், சில மாநிலங்கள், சிட்னியிலிருந்து வருபவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, திட்டமிட்டபடி சிட்னியில் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட், சிட்னியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், "மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டரை வாரங்களுக்கு மேல் உள்ளது, இது சிட்னியின் பொதுச் சுகாதார நிலைமையை மதிப்பிடுவதற்கான நேரத்தை எங்களுக்கு வழங்கும்" என்றும் "நாங்கள் எங்கள் அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யவில்லை, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை விளையாடுவதே எங்கள் விருப்பமாக உள்ளது." எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.